நட்பு என்ற மூன்றெழுத்து மோகன சொல்லில் சிக்காதவர்களே இருக்க முடியாது. இதோ பதிவர் செந்தழல் ரவி தனது நட்பு குறித்து 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஒரு பதிவு போட்டிருக்கிறார். இதனை படிக்கும்போது நமக்கும் நம் பள்ளிப்பருவம் நினைவுக்கு வருவது இப்பதிவின் ஸ்பெஷல் என்று சொல்லலாம். அட... நீங்களும் அதை படிச்சுத்தான் பாருங்களேன்.
எல்லாருக்கும் ஒரு ப்ரண்டு இருந்திருப்பாங்க...பள்ளி காலத்தில...கல்லூரி காலத்தில...காதலி இல்லாதவங்களை பார்க்கலாம்...சைக்கிள் டூ வீலர் இல்லாதவங்களை பார்க்கலாம்...படிப்பில் நாட்டம் இல்லாதவங்களை பார்க்கலாம்...ஆனால் ஒரு நன்பன் இல்லாதவங்களை பார்க்க முடியுமா ? அட சொல்லுங்க...முடியாதில்லையா....
அதுமாதிரி எனக்கும் ஒரு நன்பன் பள்ளிப்பருவத்தில....இப்போது கணக்கில்லாம நன்பர்கள்...அது வேற விஷயம்...ஆனால் பள்ளிக்காலத்தில நன்பர்கள் தோழனோ - தோழியோ எல்லோருக்கும் குறைவாத்தான் இருந்திருப்பாங்க...நானும் சராசரிதானே...அதனால ஒரே ஒரு ப்ரண்டு...
நான் நெய்வேலியில் படித்தபோது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தால்
கண்டிப்பாக இவன் இல்லாமல் சொல்லமுடியாது...
வருடம் 1987 ல் இருந்து ஒரே ஆண்டு தான் இவனுடன் படிச்சது...பெயர் எழிலரசன்...நெய்வேலி ப்ளாக் ப்ளாக்கா பிரிக்கப்பட்டிருக்கும்...இப்போ நோய்டா இருக்கமாதிரி...நான் இருந்தது இரண்டாம் ப்ளாக்...என்னோட அப்பா காவல் உதவி ஆய்வாளரா இருந்தது நெய்வேலியில் இருந்த ஒரே போலீஸ் ஸ்டேஷனில்...
எழிலரசனோட வீடு இருந்தது ஒன்பதாம் ப்ளாக்...இரண்டாம் ப்ளாக்குக்கும் ஒன்பதாம் ப்ளாக்குக்கும் இடையே இடைவெளி அதிகமில்லைங்க...ஒரே ஒரு தெரு தான்...நான் இருந்தது ஒட்டக்கூத்தர் சாலை...அவன் வீடு எங்க தெருவில் இருந்து வெளிவந்து குட்டியா ஒரு பாலம் கடந்து, வளைவு திரும்பினா சிதம்பரம் சாலை...அதில் இரண்டாவது வீடு...
இந்த படத்தில் ஆறு 'பி' பிரிவின் பதாகையை தாங்கி அமர்ந்திருப்பதுதான் எழில்...எங்கெ மேரி டீச்சர் பக்கத்தில்...மேரி டீச்சர்...மேரி டீச்சருக்கு அந்த பக்கம் உட்கார்ந்து இருப்பது பர்ஸ்ட் ரேங்கை தவிர வேற எந்த ரேங்கையும் வாங்காத ராகவன்...எழில் எப்போதும் இரண்டாவது ரேங்க்தாரி..இடது பக்கம் கீழே பெஞ்சில் நான் இருக்கேன்...போட்டி எல்லாம் வைக்காமல் நானே சொல்லிடுறேன்...இடப்பக்கம் இருந்து மூன்றாவது...ஒரு விளம்பரதாரி தன்னோட வாட்சை என் மேலே போட்டு படம் காட்டுது பாருங்க...எனக்கு வலப்புறம் வெள்ளை பேண்ட்டில் ஜஹாங்கீர் பாய்(boy)..இன்னும் எல்லார் பெயரையும் சொல்ல ஆரம்பிச்சா மவுஸாலேயே அடிப்பீங்க...
நானும் எழிலும் எப்படி சந்திச்சோம் அப்படின்னுல்லாம் நியாபகம் இல்லை..ஆனால் நாங்க ப்ரண்ட்ஸ்...காரணம் என் வீட்டுக்கு பக்கத்தில் அவனோட வீடு இருந்ததும் என்னோட குட்டி சைக்கிள்ல அவனுக்கு ட்ராப் கொடுத்ததும் கூட இருக்கலாம்...மேலுக்கு சொல்லனும்னா எங்கப்பா போலீஸ் அப்படீன்னு சொல்லி வம்பு செய்யவந்த நாதாரிகளை நான் பயமுறுத்தி அடக்கினதும் ஒரு காரணமா இருக்கலாம்...அதுக்கு ஏத்தமாதிரி அவரும் அப்பப்போ யூனிபார்மோட வந்து ஒரு லுக் விட்டுட்டு போறதாலயும் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி அவனுக்கு இருந்திருக்கலாம்...காரணம் எங்க ஸ்கூல்ல தூரத்தில இருந்து வந்து படிக்குற பசங்க - கொஞ்சம் அடாவடியா இருப்பானுங்க...
நாங்க செய்த சின்ன சின்ன குறும்புகள் ஏராளம்..பள்ளியில் குடிநீர் பைப்பருகில் மொத்தமாக வளர்ந்திருக்கும் தொட்டாச்சினுங்கி செடிகள் எல்லாத்தையும் சுருங்க வைக்கனும் என்று விளையாடி மதியம் வகுப்புக்கு போகாம மேரி டீச்சர்கிட்ட அடிவாங்கியது மிகவும் சிம்பிள்..
அப்போ BIG FUN பபிள்கம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான நேரம்...எவனப்பாத்தாலும் பபுள்கம்ல முட்டையை விட்டுக்கிட்டு திரிஞ்சானுங்க...ஒவ்வொரு பபிள்கம்லயும் கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா படம் இருக்கும், அதுக்கேத்தமாதிரி ரன்னும் போட்டு இருப்பாங்க அந்த படத்தில்..கபில்தேவுக்கு சிக்ஸர், அஸாருக்கு நாலு..இதெல்லாம் சேர்த்து வெச்சா கிரிக்கெட் பேட் தர்றதா ஒரே பேச்சு...நானும் என்னால முடிஞ்சவரைக்கும் சேர்த்து பார்த்தேன்...கடைசிவரைக்கும் ஒன்னும் தேறல....எனக்கு தெரிஞ்சு எவனும் பேட்டு இல்லை, ஒரு ஸ்டம்பு கூட வாங்கி சரித்திரம் இல்லைன்னாலும், நானும் ஏதோ சேர்த்துக்கிட்டிருந்தேன்...
இதுல ஒரு மேட்டர்...எங்க கையில காசு இல்லாதப்போ BIG FUN வாங்க என்ன செய்யறது ? இதில்தான் நம்ம எழிலோட குறும்பு..கையில பத்து பைசாவை வெச்சிக்குவோம்...கடையில் ஒரு குறிப்பிட்ட மிட்டாய் டப்பா கடைக்காரர் திரும்பி எடுக்கிறமாதிரி இருக்கும்...BIG FUN டப்பா - இது அதிகமா ஓடுற எப்.எம்.சி.ஜி புராடக்ட் - அப்படீங்கறதால - முன்னாலியே இருக்கும்..கடைக்காரர் திரும்பி பூமரை எடுக்கும் அந்த முக்காலே மூனுவீசம் செக்கண்ட்ல எழில் BIG FUN டப்பாவை திறந்து - கொத்தோட BIG FUN ஐ அள்ளி - பாக்கெட்ல போட்டுக்கிட்டு - திரும்பி டப்பாவை மூடிடுவான்...எழில் வீட்ல அவனோட அப்பா ரொம்ப செல்லம்...தினமும் குறைந்தபட்சம் 50 பைசாவாவது கொடுப்பார்...ஆக பலமுறை நாங்க BIG FUN ஐ மொத்தமா திம்போம்...
உங்களை அதிகம் போரடிக்க விரும்பல...
நான் என்னோட அதிகபட்ச குறும்பு காரணமா - கடலூர் புனித வளனார் பள்ளி - உள்விடுதியில சேர்க்கப்பட்டேன்...அப்பா அடிக்கடி ( தண்ணி இல்லாத காட்டுக்கு) ட்ரான்ஸ்பர் ஆகிறதும் ஒரு காரணம்...அங்கேயே தங்கி படிக்கும்போது வீட்டுக்கு லெட்டர் போடுவேன்...எழில் வீட்டுக்கும் லெட்டர் போடுவேன்...அவனும் எனக்கு நிறைய அட்வைஸ் செய்து லெட்டர் போடுவான்...எனக்கு லீவ் கிடைக்கும்போது எல்லாம் ( வருஷத்துக்கு இரண்டு முறைதான் )அவங்க வீட்டுக்கு பஸ்புடிச்சி போய் பார்ப்பேன்...அவங்க அம்மா சொல்லுவாங்க...எங்க வீட்டுக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் நீதான் என்று..நானும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்..எனக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் உங்க பையந்தான்..என்று...ஒரு முறை அவனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்குன்னு லெட்டர் போட்டான்..நான் கிளம்பி ஒரு பிஸ்கெட் பாக்கெட்டோட அவங்க வீட்டுக்கு போனேன்..( எனக்கு லீவ் ஒரு வருடம் கழித்து தான் கிடைத்தது)...எழில் அம்மா சொன்னாங்க...டேய்...பெரியாளாயிட்டடா நீ...என்று...நான் மையமாக சிரித்து வைத்துவிட்டு, எழில் வீட்டு தோட்டத்தில் நெல்லிக்காய் அடிக்க ஓடினேன்...
அப்படியே ஒரு பத்து வருடத்தை கூட்டிக்கொள்ளுங்க...என்னுடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...அவன் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...போனில்லாத அந்த காலத்தில் எப்படியாவது மாதம் ஒரு போஸ்ட் கார்ட் போட்டுவிடுவான்...நான் ப்ள்ஸ் டூ படித்த காலத்தில் எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்க்காக பல லெட்டர் போட்டான்..இன்னும் என் தனிப்பெட்டியில் இருக்கிறது...அவன் சீர்காழியில் டிப்ளமோ சேர்ந்தான்..பிறகு குடும்பத்தில் ஏற்ப்பட்ட ஒரு மாபெரும் பிரச்சினையில் ( அது பற்றி அவன் அனுமதியின்றி எழுதுதல் முறையற்றது) - குடும்பத்தை விட்டு வெளியேற நேர்ந்தது...பிறகு வேலூரிலோ சேலத்திலோ ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் நிறுவனத்தில் இணைந்ததா தகவல் கிடைத்தது...நானும் கல்லூரிப்படிப்புக்கு போயிட்டேன்..
கல்லூரி இறுதி தேர்வுல ஒரு பாடத்துல பெயில்...ஒரு ஆண்டு வீட்ல கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கவேண்டிய கட்டாயம்..அப்படியே ஊர் சுத்திக்கிட்டு திரிஞ்சிக்கிட்டிருந்தபோது ஒரு நாள் திடீர்னு வீட்டுக்கு வந்தான்...
என்னடா என்று விசாரித்தால், தான் ஓசூரில் பாகாலூர் ரோட்டில் ஒரு ஷேர் புரோக்கரேஜ் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அங்கேயே தங்கியிருப்பதாகவும் சொன்னான்...அடுத்த விஷயம் சொன்னதும் நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்...அங்கேயே வேலை செய்யும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் வேறு சாதி என்பதால் அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள மறுப்பதாகவும், என்னோட அப்பா போலீஸ் துறையில் இருப்பதால் அவரிடம் சொல்லி தன்னோட கல்யாணத்தை நடத்திவைக்குமாறும் கேட்டான்...
எனக்கு உள்ளூர உதறல்...நாடார் கடையில் தம் அடித்து வைத்த இருவது ரூபாய் கடனை எப்படி அடைப்பது என்று பல திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்த ( கடை இருக்கு ஏரியா பக்கம் போறதில்லை) நான் எப்படி இந்த விஷயத்தில் அவனுக்கு உதவமுடியும் என்று தெரியாமல் மண்டை காய்ந்தேன்...என்னோட அப்பாவிடம் இதுபோன்ற விஷயங்களை பேசும் தைரியமும் கிடையாது...பெயில் ஆகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறவனுக்கு என்ன செல்வாக்கு இருக்கமுடியும்...அவரோட பத்து சைஸ் செருப்பை மூஞ்சிக்கு அருகில் பார்க்கத்தான் முடியும் என்ற முன்முடிவுக்கு வந்திட்டேன்..ஒருவேளை சொல்லி இருந்தால் கல்யாணத்தை அருமையாக நடத்தி வைத்திருப்பாரோ என்னவோ...ஸ்டேஷன்ல பல கல்யாணம் நடத்திவெச்சிருப்பாரு தானே..பொது அறிவும் கிடையாது...பையில் காசும் கிடையாது...உள்ளூர தைரியமும் கிடையாது...அவனும் சீக்கிறத்திலே புரிந்துகொண்டான்...சரிடா....நீ உன்னோட அப்பாகிட்ட சொல்ல முயற்சி செய்...நான் மாயூரத்தில இருக்க எங்க சித்தப்பாவிடம் போறேன் என்று போயே போய்விட்டான்...அதுதான் நான் கடைசியாக பார்த்தது...
அப்படியே கொஞ்சம் பார்ஸ்ட் பார்வர்ட்...அதுக்கு பிறகு சென்னைக்கு போய் - வெட்டியா திரிஞ்சு - வாழ்க்கைப்பாடத்தை தி நகர் ரங்கநாதன் ஸ்ட்ரீட் பி.ஆர்.எஸ் மேன்ஸனில் படிச்சு, பசியை அனுபவிச்சு..ஆங்கிலம் பேச பழகி - ஒரு வழிகாட்டி மூலமா வேலைக்கு போய் - மைக்ரோஸாப்ட் டெக்னாலஜியில கோடிங் எழுதி - ரிமோட் டெஸ்க்டாப்ல யூ.எஸ்ல இருக்க கணிப்பொறியை திறந்து வேலைசெய்து - பாம் பாக்கெட் பிஸிக்கு மோட்டரோலா கோடுவாரியரில் கோடிங் எழுதி - கிளையண்டோட சேட் செய்து - சேலரி ஹைக் - யாகூ மெஸஞ்சர் என்று ஜல்லியடித்து - பெங்களூர் டெலெபோனிக் இண்டர்வீயு தேறி - ஸாஸ்கன் நிறுவணத்தில் இணைந்து - வாழ்க்கையை திரும்பி பார்க்கிற அளவுக்கு போனபோது ஐந்து வருடம் கடந்துவிட்டிருந்தது...
திடீர்னு பழைய விஷயங்களை எல்லாம் புரட்டிக்கிட்டிருக்கும்போது எழிலோட ஒரு லெட்டர்..பிரிக்காமல் இருந்தது...தேதி பார்த்தால் 1999 ஆகஸ்டில் ஒரு தேதி...அம்மா அம்மா என்று அலறி..ஏம்மா இந்த லெட்டரை எனக்கு கொடுக்கல்ல...என்று எகிறியபோது...டேய், அது நீ காலேஜ்ல இருக்கும்போது வந்ததுடா...நீ வரும்போது கொடுக்கலாமேன்னு பெட்டியில் போட்டுவெச்சிருந்தேன்...என்றார்...
அவசரமாக பிரித்தபோது, தான் ஓசூரில் பணியில் இருப்பதையும், ஒரு முக்கியமான விஷயமாக என்னை சந்திக்கவேண்டும் என்றும், தன்னோட ஆபீஸ், வீட்டு முகவரி எல்லாம் எழுதி இருந்தான்..அதாவது இந்த கடித்தத்தை என்னை வந்து கடைசியாக சந்திக்கும் முன் எழுதி இருக்கிறான்...
அடுத்த வீக் எண்ட்...பைக்கை எடுத்துக்கிட்டு ஒரு பத்து லிட்டர் பெட்ரோல் அடிச்சுக்கிட்டு கிளம்பிட்டேன் ஓசூருக்கு...முதலில் பாகாலூர் ரோடு...அவன் வேலைசெய்த ஷேர் ட்ரேடிங் (ப்ரோக்கிங்) நிறுவனம்...இன்னும் இயங்கிக்கொண்டுதானிருந்தது...ஒரே ஒரு ரிசப்சனிஸ்ட் மட்டும் இருந்தார்...
எழிலா...ஆமாம், பழைய ஸ்டாப்...மேரேஜ் கூட இங்கேயேதான் இல்ல..ஆனா அவர் டீடெய்ல்ஸ் எதுவும் இல்லையே..நீங்க வேணா சார் வருவார்...வெய்ட் பண்ணி பார்த்து கேட்டுக்கோங்க..என்றார்...
இன்னொரு ஸ்டாப் உள்ளே நுழைந்தார்...இந்த கம்பெனியில இருந்து நெறைய பேர் பெங்களூர்ல தான் சார் ஜாய்ன் பண்ணாங்க...நீங்க பேங்களூர்ல விசாரிக்கலாமே...
நான் அங்கே இருந்துதான் மேடம் வர்றேன்...என்றேன்..சுருக்கென..
அந்த நிறுவனத்தின் 'சார்' வருவார் என்று காத்திருந்தது தான் மிச்சம் மாலை மங்கும் வரை...வரவேயில்லை...மொபைல் நெம்பர் சுவிட்சுடு ஆப் என்ற தகவலை கொடுத்தது..வீட்டையாவது தேடலாமே என்று போனபோது ஏமாற்றத்தின் உச்சத்துக்கே போனேன்..பதினாலு சீயா..அது பழைய நெம்பர் சார்...புது நெம்பர் இருக்கா...அஞ்சு வருஷம் முன்னால இங்கெ நாலுவீடுதான் சார் இருந்தது...இப்போ ஆயிரம் வீட்டுக்கு மேல இருக்கே என்றார் கொஞ்சம் விவரம் அறிந்தவர்...
ஆயாசமாக இருந்தது...கொஞ்சம் சுத்தி விசாரித்து பார்க்கலாம் என்று பைக் நுழையாத தெருவெல்லாம் போய் பதினாலு சீயை தேடி இருட்டும் வரை சுற்றியதில் கடைசியில் இரண்டு மணி நேரம் முன்பு விசாரித்தவரிடமே திரும்பி கேட்டேன்...
சார் இன்னும் நீங்க தேடிக்கிட்டேவா இருக்கீங்க...கடையாண்ட கேட்டீங்களே...நாந்தானே சொன்னேன்..என்றார்...
திரும்ப வீட்டுக்கு வந்து தடாலென கட்டிலில் விழுந்தபோது ஏனென்று தெரியாமல் சிறிய கண்ணீர்துளி...அதை விடுங்க...உங்களை எல்லாம் ரொம்ப போரடிச்சுட்டேனா...
ஒரு ரெக்வஸ்ட்...நீங்க ஷேர் மார்க்கெட், பங்கு சந்தை, நெய்வேலி, மாயூரம், பெங்களூர், எங்கேயாவது எழிலரசன் அப்படீங்கறவரை பார்த்தா...எக்ஸ்கியூஸ் மீ...உங்களுக்கு ரவியை தெரியுமா ? நெய்வேலியில உங்களோட படிச்சாரே..அப்படீன்னு கேளுங்க...
9 comments:
லொடுக்கு கமெண்ட் : அண்ணாச்சி செந்தழல் ரவி... போட்டோவுல எங்க தேடுனாலும் ஒரு பொண்ணு கூட சிக்கலியே. உங்கள நெனச்சா எனக்கு பாவமா இருக்கு... ஹி ஹி ஹி : (ச்ச்ச்ச்ச்சும்மா டமாசு கமெண்ட்தான். கோவப்பட்டுறாதீங்க ரவி சார்)
லொடுக்குப்பாண்டி அவர்களுக்கு...
எமது நிருபர் வலைப்பதிவில் இடம்பெறும் செய்திகளை தங்களது வலைப்பூவில் ஹாட் சினிமா நியூஸ் என்று வெளியிடுவதற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வித்தியாசமான முயற்சி பாராட்டத்தக்கதுதான். அதே நேரத்தில் தங்களது சொந்த பதிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டால் நலமாக இருக்கும் என்பது எனது கருத்து. மிக்க நன்றி...!
- சினிமா நிருபர்
உண்மையிலேயே சுவாரஸ்யமான பதிவுதான். செந்தழல் ரவிக்கு எனது பாராட்டுக்கள். பதிவை படிக்கும்போதே எனக்குள் எனது பால்ய கால நண்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.
:-(
//தங்களது சொந்த பதிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டால் நலமாக இருக்கும் என்பது எனது கருத்து. //
என்னைப்பத்தி எழுதுறதுக்குன்னு எதுவுமே இல்ல நிருபர் சார். நான் லொடுக்கு பாண்டி. வெடுக்கு வெடுக்குன்னு சிரிக்கிற பாண்டி. அவ்ளோதான் நிருபர் சார்.
அங்கங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் உள்ளடக்கத்தை புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி !!!
pooyaa neeyum... un lodukku pathivum.............
இதுல இருக்கிற புகைப்படம் பார்த்தால் பள்ளியில் புகைப்படம் எடுத்த நினைவு வருகிறது.
அதுவும் வகுப்பை சிலேட்டில் எழுதி வைத்து போஸ் கொடுப்பது :-))))
லொடுக்கு பாண்டி என்னுடைய பதிவுகளுக்கு இந்த வார நட்சத்திர பதிவா!!!....என்னையும் மதித்து இந்த வாரம் உங்கள் பதிவில் இணைத்ததற்கு நன்றி
Post a Comment