இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Friday, August 15, 2008

கண்டபடி உயரும் சென்னை வீட்டு வாடகை!! ஒரு அலசல் : கிரி

மனசாட்சி என்ற பெயரில் வலைபதிவர் கிரி கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி எழுதிய ஒரு பதிவு என்னை கவர்ந்தது. நீங்களும் அதை படியுங்களேன்...!


சென்னையில் கண்டபடி உயர்ந்து வரும் வீட்டு வாடகை அனைவரையும் கவலை கொள்ள வைத்துள்ளது, குறிப்பாக நடுத்தர மக்களையும் அரசாங்க வேலையில் உள்ளவர்களையும்.

முன்பு பேச்சலர்களுக்கு வாடகைக்கு விட மாட்டேன் என்று கூறியவர்கள், இப்போது அவர்களை தவிர மற்றவர்களுக்கு வாடகைக்கு விட யோசிக்கிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் கணிப்பொறி துறையில் கிடைக்கும் அதிக சம்பளம். முக்கியமாக யாரும் அலைய தயாராக இல்லை என்பதால் 1000 அல்லது 2000 அதிகம் என்றாலும் சரி என்று ஒத்துக்கொள்ளும் மனோபாவம். நானும் கணிப்பொறி துறையில் தான் இருக்கிறேன் என்றாலும், உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியதாக தான் இருக்கிறது.

நான்கு பேச்சலர்கள் சேர்ந்து 3000 வாடகை மதிப்புள்ள வீட்டிற்கு 1000 வீதம் 4000 கொடுக்க தயாராக இருப்பதால் இவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்று ஒரு வீடு வாடகைக்கு free ads அல்லது classifieds ல் வருகிறது என்றால், நம்பினால் நம்புங்கள் காலை 7 மணிக்கு பிறகு நீங்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டால் அந்த வீடு முடிந்து விட்டதாக கூறுவார்கள். அந்த அளவுக்கு சென்னையில் வீடு கிடைப்பது கஷ்டம்.

கணிப்பொறி துறையில் உள்ளவர்களால் மட்டுமே வாடகை உயர்வு என்பதை ஒப்புக்கொள்ள முடியாது, சதவீதத்தில் வேண்டும் என்றால் அளவு அதிகம் இருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களுமே சிறப்பாக உள்ளன, எனவே அனைவருமே அதிக பணம் கொடுத்து, அலைவதற்கு விரும்பாமல் உடனடியாக வீட்டை பிடிக்க விரும்புகிறார்கள். இதை எல்லாவற்றையும் விட தரகர்கள், இவர்களின் பங்கு விலை உயர்வுக்கு மிக முக்கியம். தங்களுக்கு கிடைக்கும் தரகு பங்கின் அளவை அதிகரிக்க இவர்களே போலியான ஒரு டிமாண்ட் ஏற்படுத்திவிடுகிறார்கள், மற்றும் வீட்டு வாடகையை உயர்த்தி விடுகிறார்கள்.

இப்பொழுது சென்னையில் 6000 குறைவாக வீடு கிடைப்பது மிக அரிது, அதுவும் பல கண்டிப்புகள் உடன் வேறு. வீடு எடுப்பது என்றால் சாதாரண விஷயம் இல்லை, ஏலம் போன்றது தான் அங்கே சென்றால் யார் அதிகம் கூறுகிறார்களோ,அவர்களுக்கே அந்த வீடு. அதிக வீட்டு வாடகை கொடுப்பது வேறு வழி இல்லை என்றாலும், கொடுக்கும் வாடைகைக்கும் அவர்கள் கொடுக்கும் வசதிகளுக்கும் சம்பந்தமே இல்லை. எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்காமல் கண்டபடி வாடகை வசூலிப்பது தான் பலரின் வயித்தெரிச்சலுக்கு காரணம்.

நடுத்தர மக்களின் வருமானத்தில் பாதி வீட்டு வாடைகைக்கே போய் விடுவது கசப்பான உண்மை. என்னுடைய கவலை எல்லாம் வரும் காலங்களில் இவர்கள் எப்படி இதை சமாளிக்க போகிறார்கள் என்பது. முன்பு கிண்டி என்றால் வாடகை குறைவு என்று அங்கே வீடு பார்த்தார்கள், பிறகு அது தாம்பரம் ஆனது, இப்பொழுது அங்கேயும் உயர்ந்து விட்டது. இப்படியே சென்றால் செங்கல்பட்டில் தான் வீடு பார்க்க முடியும் போல உள்ளது.

ஒருவர் ஒரு வீட்டை காலி செய்கிறார் என்றால், அடுத்து வரும் நபருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் 500 குறைந்தது அதிகம் சொல்கிறார். இப்பொழுது யாரையும் அதிக நாட்கள் தங்க விடுவதில்லை (அப்போது தான் வாடகையை அடிக்கடி உயர்த்த முடியும்) அப்படியே அனுமதித்தாலும் வாடகை உயர்வு முன்பு போல இல்லாமல் அதிகளவில் இருக்கும். ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பேசாமல் வீட்டை காலி செய்ய வேண்டியது தான், அடுத்த நபர் தயாராக இருக்கிறார், நீங்கள் எப்போது கிளம்புவீர்கள் என்று, எனவே வீட்டு உரிமையாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே குழந்தைகளின் பள்ளி மற்றும் அலுவலக இடம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அடிக்கடி மாற்ற முடியாத நடை முறை சிக்கல் இருப்பதால் அவர்கள் கேட்பதை அழுது தொலைக்க வேண்டி உள்ளது.

சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் வீட்டு வாடகை பற்றி எப்படி வேண்டும் என்றாலும் கருத்து கூறலாம், வீடு வாடகைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் உண்மையான வலி தெரியும். எனக்கும் அந்த அனுபவம் இருப்பதால் கூறுகிறேன்.

இதில் அரசு தலையிட்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே இந்த வாடகையை வசூலிக்கலாம் என்று வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும், இல்லை என்றால் இதற்க்கு விடிவு இல்லை. கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் இந்த வாடகை பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்பது என் கருத்து. கடைசியாக, கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், எனவே அரசு தலையிட்டால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுவரை வேற என்னங்க! பொலம்பிட்டே கொடுத்துட்டு இருக்க வேண்டியது தான் வேற வழி! எவ்வளோ பார்த்துட்டோம்! இதை பார்க்கமாட்டோமா !!

0 comments:

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.