தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் தேனி மாவட்டத்தில் யார் பெண் என்று தெரியாமல் இரண்டு மாப்பிள்ளைகள் மாற்றி தாலி கட்டிய விநோதம் நடந்துள்ளது. காரணம் - மின் தடை!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.
இங்கு 40 ஜோடிளுக்கு இலவச கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. கல்யாணத்திற்கான ஏற்பாடுகளால் அந்தக் கோவில் வளாகம் முழுவதும் உறவினர்கள், குடும்பத்தினர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அனைவரும் முகூர்த்த நேரத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். எல்லாம் ரெடியானது, முகூர்த்த நேரமும் வந்தது. மாப்பிள்ளைகள் கையில் தாலி எடுத்துக் கொடுக்கப்பட மங்கள மேளம் முழங்க மாப்பிள்ளைகள் தாலி கட்ட தயாராயினர். அப்போது திடீரென மின்சாரம் போனது.
இதனால் கல்யாணம் நடந்த இடத்தில் பெரும் குழப்பமானது. இந்த களேபரத்தில் வீராசாமி, பாலமுருகன் ஆகிய இரு மாப்பிள்ளைகள் தவறுதலாக வேறு பெண்களுக்குத் தாலி கட்டி விட்டனர்.
வீராசாமி தாலி கட்ட வேண்டிய பெண் சுப்புலட்சுமி. ஆனால் அவரோ சுப்புலட்சுமிக்கு பக்கத்தில் நின்றிருந்த அவரது தோழிக்கு தாலி கட்டி விட்டார்.
அதேபோல பாலமுருகன், சிவகாமி என்பவருக்குப் பதில் அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டி விட்டார்.
இதனால் அங்கு பெரும் குழப்பமாகி விட்டது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்ட பெரியவர்கள் கூடி பேசி பரிகார பூஜை ஒன்றை செய்ய தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து கட்டிய தாலிகளை கழற்றச் சொல்லி அவற்றுக்கு பரிகார பூஜை செய்தனர். பின்னர் உரிய மணமகள்களின் கழுத்தில் நல்ல விளக்கொளியில் மாப்பிள்ளைகள் தாலி கட்ட கல்யாணம் இனிதே முடிந்தது.
செய்தி : தட்டிஸ் தமிழ்
இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா
Sunday, September 7, 2008
மணமகளின் தோழிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளைகள் : மின்தடை கூத்து இது!
Posted by லொடுக்குபாண்டி at 4:35 PM 5 comments
Labels: தட்டிஸ் தமிழ்
முக்கிய செய்தி : குமுதம், விகடனுக்கு ஜெயலலிதா நோட்டீஸ்
தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்ஸ் வார இதழ்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஒரு பத்திரிகைக்கு தனது வக்கீல் நவநீத கிருஷ்ணன் மூலமாக ஜெயலலிதா அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வெளியிடப்படடுள்ளது. இந்த பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு இதழுக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில் "எம்ஜிஆர் மறைவுக்கு பின் திமுகவில் சேர முயன்றார் ஜெயலலிதா'. தூது சென்றவர்கள் பகீர் வாக்குமூலம் என்று செய்தி வெளிவந்தது. இதற்கு அந்த பத்திரிகை மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.10 கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி : தட்டிஸ் தமிழ்
Posted by லொடுக்குபாண்டி at 4:32 PM 1 comments
Labels: தட்ஸ்தமிழ்
Wednesday, September 3, 2008
தினமலர் மீது அட்டாக் : சன் குழுமத்துக்கு அல்வா செய்தி
தினமலர் பற்றிய செய்தி என்றாலே சன் குழுமத்துக்கு அல்வா கிடைத்ததுபோல இருக்கும் போல. ஏற்கனவே தினமலர் ரமேஷ் மீதான பெண் நிருபர் உமாவின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி கடந்த ஆண்டு வந்த போது வந்தபோது சன் டிவி, சன்நியூஸ், தினகரன், தமிழ்முரசு போன் சன் குழும நிறுவனங்கள் செய்திகளை போட்டு தினமலரை தாக்கி எழுதின. இப்போது வேலூர் தினமலரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு கார்ட்டூன் படம் போட்டதற்காக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தையும், போலீசார் நடத்திய தடியடியையும் தினகரனில் முதல் பக்கத்தில் படத்துடன் போட்டு தாளித்து விட்டார்கள். இந்த செய்தியில் உள்நோக்கம் இருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க. (இது தினகரனில் வந்த செய்திதாணுங்கோ....)
நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் வேலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கும் நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேலிச் சித்திரம் வெளியான திங்களன்று மாலையில் வேலூர் அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நேற்று காலை வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரைபீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும் போலீசாரும் அங்கு குவிக்கப் பட்டனர்.
வேலூர் கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவ், டிஐஜி சுந்தரமூர்த்தி, எஸ்பி அறிவுசெல்வம், டிஆர்ஓ சுகந்தி, ஏடிஎஸ்பி ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்தனர். போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போக சொன்னார்கள். ஆனால், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
அப்போது திடீரென யாரோ கல் வீசினர். ஏடிஎஸ்பி ராமதாஸ் மீது ஒரு கல் விழுந்ததில், அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. உடனே போலீஸ் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். விரட்டி விரட்டி தடியடி நடத்தியதில் பலர் காயம் அடைந்தனர். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை தடியடி நடத்தி தாக்குவதா என்று முஸ்லிம் பெரியவர்கள் போலீச் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
தடியடியில் காயம் பட்டவர்களை ரத்தம் சொட்ட அழைத்துவந்த சிலர் அதிகாரிகளை சூழ்ந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை கலைந்துபோகுமாறு கலெக்டர் கூறினார். ஆனால், ‘இந்து - முஸ்லிம் இடையே பகையை தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரை கைது செய்ய வேண்டும்’ என்று கோஷமிட்டபடி கூட்டத்தினர் முன்னேறினர்.
இதற்கிடையே, மக்கான் சந்திப்பில் ஏராளமானவர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் மீது கல் வீசப்பட்டது. பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ஒரு பஸ்சில் இருந்த 3 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதை தொடர்ந்து மக்கானிலும் போலீசார் தடியடி நடத்தினர். 25க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.
பின்னர், கலெக்டரும் உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள் சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர் உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். இதற்கிடையே, வெளியே நின்றிருந்த கூட்டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர்களை போலீசார் துரத்தி துரத்தி அடித்தனர்.
பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை கொடுத்தவர் இவர்தான் என்று ஒரு ஊழியரை தினமலர் நிர்வாகிகள் போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவத்தால் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெங்களூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் ரோந்து வருகின்றனர்.
Posted by லொடுக்குபாண்டி at 10:39 AM 8 comments
லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?
பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.